'Paalai Pookal' Collection of Modern Tamil Poets by Muscat. Basheer Released in Muscat

'Paalai Pookal' Collection of Modern Tamil Poets by Muscat. Basheer Released in Muscat
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளாராகச் செயல்பட்டு வருகிறார்.

Sunday, 15 June 2014

விடுதலை இதழில் 'பாலைப் பூக்கள்' கவிதை நூல் -ஆசிரியர் அய்யா. திரு. கி. வீரமணி அவர்களின் கருத்துப் பின்னூட்டம்

விடுதலை இதழில் 'பாலைப் பூக்கள்' கவிதை நூல் பற்றி ஆசிரியர் அய்யா. திரு. கி. வீரமணி அவர்களின் கருத்துப் பின்னூட்டம்.

http://www.viduthalai.in/e-paper/82139.html 

ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்குச் சென்று ஒரு நாள் - இடைவெளியில் - தங்கி, சென்னை திரும்பினோம் ஜெர்மனி நாட்டுப் பயணத்தில் (8.6.2014) ஓமான் கடலை நினைத்தால் இன்னமும் மறக்கவே முடியாத வேதனை எம் நெஞ்சத்தில்!

ஆனால் சிறிய அழகான, இயற்கை எழில் கொஞ்சும் நாடு, நெய்தல் (கடலும் கடல் சார்ந்த பகுதி), குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதி), பாலையும் மூன்றும் இணைந்த இயற்கைத்தாயின் முக்கூட்டு நாடு அது!

அதன் இயற்கை அழகைக் கண்டு வியந்தோம் அங்கு நமது குடும்ப நண்பர் அதிகாரியாக பணி புரியும் தி.வெங்கடேஷ் - அவரது வாழ்விணையர் சாமுண்டேசுவரி அவர்களும் எங்களை வரவேற்று தங்கள் இல்லத்தில் தங்க வைத்தனர். அன்பு உபசரிப்பால் திணற வைத்த அவர்கள், அங்குள்ள தமிழ் உறவுகளில் முக்கிய பொறுப்பாளராகவும், பல்வேறு துறை ஆற்றலாளராகவும், உள்ளவர் களையும் அவர்களது இல்லத்திற்கு அழைத்து ஒரு சிறு கலந்துரையாடல் நடத்தினார்கள்.

பல நூற்றுக்கணக்கான இளம் தமிழ்ப் பிள்ளைகளும் தமிழ்ச் சொல்லித்தரும் பள்ளிப்பணி முதல் தமிழ்ச் சங்கம் வரை மிக அருமையாக அந்தந்த தமிழர்கள் தொண்டறம் புரிகிறார்கள்.

நம் தமிழர்கள் பலரும் பல்வேறு தொழிலதிபர் களாகவும், அதி காரிகளாகவும், பொறியாளர்களாக வும், மேலாண்மை பொறுப்பாளர் களும் உள்ளனர் என்பது நமது காதில் தேன் பாய்ச்சுவதாக உள்ளது!

அங்கு தமிழ்ச்சங்கத்தை மிகவும் திறம்பட நடத்திவரும் ஜானகி ராமன் தமிழ் இலக்கிய கழகத்தை அமைத்து தவறாமல் சந்தித்து நடத்தி வரும் (குமரி மாவட்டம்) பஷீர் அவர்கள் தலைசிறந்த கவிஞர் இலக்கியப் படைப்பாளியாக உள்ளார் என்பது அவர் தந்த பாலைப்பூக்கள் கவிதைத் தொகுப்பின் மூலம் உலகிற்கே பறை சாற்றுகிறது!

தமிழ்நாட்டு வாழ் தமிழர்கள் என்பது தமிழ்த் தொண்டை விட மிகச்சிறப்பானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ் மண்ணை மறக்காதது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து செல்லும் தமிழர்களை கட்சி, ஜாதி, மத பேதமின்றி வரவேற்று வாழ்த்திடவும் தவறாததே. இலக்கிய தமிழ்ப்பண்ணையையும் அங்கே உருவாக்கி, ஒற்றுமை உழைப்பு என்கிற உரமிட்டு உழவாரப் பணிகளையும் செய்திட முன்னணியில் உள்ளனர்.

பாலைவனத்தில் கூட தமிழ்ப்பூக்கள் - பாக்கள் - பூத்துக்குலுங்கும் - புதுமணம் பரப்பும் - புகழ்முடி சேர்க்கும் என்பதற்கு 'பாகவி' பஷீர் அவர்களின் பாலைப்பூக்களே சான்று பகருவதாக உள்ளன. படித்தேன், சுவைத்தேன், கீழே வைக்காமல் படித்து முடித்தேன், எல்லாம் தெவிட்டாத தேன் தான்.

இதோ ஒரு சில பூக்கள் அந்த பூங்கொத்தி லிருந்து - சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கின்றன.

கருப்பு நிறம் கொண்ட காகத்தைப்பற்றிய கவிதை வரிகள் சில

காகம் கரைகிறது; கேட்போமா? (பக்கம் 18-19) (ஒரு பகுதி)

...என் மேனியின்
வண்ணத்தால் ஒதுக்கப்படுகிறேன்
தப்பேதான்!
இங்கே!
வர்ணங்களால் பிரிப்பது
வாடிக்கைதானே!
அடுத்து வரம் தருவாய் என்ற தலைப்பில் (பக்கம் 38)

தேய்கின்ற நிலவுக்கு சேதாரம் அகற்று - தருவாய்
பௌர்ணமியில் புல்வெளியில்
பாயிரம் பாடக் காற்று!


வீதியினில் திரிகின்ற

மதயானைகள் மதிபெறட்டும்-அது
வெறி கொண்டால் இரும்புத்
தளை கொண்டு அடங்கட்டும்!


சாதியின் பிரிவினையை

சம்மட்டியால் உடை - அருள்
சோதியின் வடிவே மனிதன் என்போரை
உபசரிக்கட்டும் வாசல் நடை!

இதுபோன்ற கருத்தாழம் மிக்க கவிதை வரிகளில் நல்ல மனித நேயம் மலர்ந்த பாலைப்பூக்கள் என்ற கரு பசுஞ்சோலைப்பாக்கள்! படித்துப் பயன் பெறுங்கள்.

Read more: http://www.viduthalai.in/e-paper/82139.html#ixzz34d99r1en