'Paalai Pookal' Collection of Modern Tamil Poets by Muscat. Basheer Released in Muscat

'Paalai Pookal' Collection of Modern Tamil Poets by Muscat. Basheer Released in Muscat
மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளாராகச் செயல்பட்டு வருகிறார்.

Friday 29 June 2018

Paalai Pookal - Dubai Release - Memory


‘பாலைப் பூக்கள்’ நூல் பின்னூட்ட நிகழ்வு 2013 
நன்றியும் வாழ்த்துகளும்
நெஞ்சின் ஆழத்திலிருந்து !


Thiru. Kovintharaju, Kaapiyakko Thiru. Jinah Sharbudeen, Kavignar. Kaviri Maindhan, Thiru. Ziyavideen at Dubai. 



கவிக்கோ அப்துல்ரகுமான் புதுக்கவிதையுலகின்
புவிக்கோ
புவியுலகில் மெய்யுடலால்
நம்மை விட்டு ‘அகன்ற’
இந்நாளில், நினைவுகளெல்லாம்
அவருடன் மனமொத்துப் பழகிய
அழகிய நாட்கள் நெஞ்சில்
ஈரமாய் என்றென்றும், இன்றும்.. .!
நினைவுகளின் தொடரலைகள்
உங்களுடன் ... !


......................................................................
கவிக்கோ ஒரு இலக்கியப் புவிக்கோ!
கவிக்கோ நீ
கண்ணியக் கடலில்
விளைந்த பவளம் !
தொப்பியை கழற்றினால் மட்டும்
தலை கவிழ்கிறது உன் பேனா
வார்த்தைகளுக்கு !
வாடிய கவியுலகில்
தேடியபோது
தேடாமலே
ஓடிய வைகைக்கரைதொட்டு
பாடியே வந்துதித்த கவிக்கோ !
உன்னை வாசித்தால்
பொற்கோவை இதழ் மடியும்
பால்கோவாவின் சுவை வடிவம் !
தட்டிலே மட்டும் அழகாய்
பட்டினில் பொதிந்த கவிதையை
சுட்டிடும் அழகு தீபமாக்கி
விட்டிலாய் தமிழர்களை
சுட்டிட அழகு பார்த்தவர் !
சேற்றுக்கு மேல் நின்றாடும்
நாற்றுக்கு நளினமாய்
காற்றுக்கே கவிதை பாட
கற்றுத்தந்த காற்றாடி !
பண்டிதர் மட்டுமே படித்து
ஒண்டியாய் இழுத்த தமிழ்த்தேரை
புதுக்கவிதை வடம் பூட்டி
பாமரனுடன் உலாவரவைத்த கவிக்கோ !
நீயோ
தலைக்கனமற்ற புள்ளி
எளியவரும் வறியவரும்
எப்பொழுதும் தேடிவரும்
பெரும் புள்ளி !
நேர்மையும் தர்மமும்
நித்தமும் நீதொழும் பள்ளி !
என்போன்ற தமிழ்க்கவிதை
ஆர்வலருக்கு நீ ஒரு
தமிழ்ப்பள்ளி !
அறிவுசார் கவிஞர்க்கோ
கல்விச்சாலையின் தரமான
தனிப்பள்ளி !
இன்னும் தொட்டுப்பார்த்து
ரசிக்க நினைக்கும்
தமிழ்த்தோழி !
கவிதை எழுத என்
பேனா நினைக்கும்
போதெல்லாம்
வருகிறாய் நீ ஒரேஒரு
விடிவெள்ளி !
நீ கவிதை விஞ்ஞானி
இலக்கியப் பொறியாளர்
செந்தமிழ் ஓடத்தை
உந்த வைத்து ஓட்டிய
புதுக்கவிதைத் துடுப்பு !
கவிதைப் பட்டறையில்
கனன்ற ‘படிம’ உருக்கு !
வார்த்தை இருப்புக்களை
புதுப்பொலிவால்
புடம்போட்டு கூராக்கியவன் !
யாப்பையும் தளையையும்
‘காப்பு’க் கட்டிவத்து
புதுக்கவிதைத் திருவிழாவுக்கு
புதுமரத்தில்
கொடியேற்றியவன் !
கண(நேரத்)த்துக்குக்
கணக்கு பார்த்துக்
கவிதை வார்த்தைகள்
வர்த்தகமாகும்
வெள்ளித்திரைச் சந்தையில்
பணத்துக்கு
விலை போகாதது
உன்பேனா !
நீ கண்ட நல்ல தமிழ்க்கனவுகள்
நிஜமாய் பலிக்கட்டும்
நிறைவாய் தமிழ்த்தாயின்
தமிழமுது வற்றாது சுரக்கட்டும் !
உன் நினைவுகளால்
என்றென்றும் ...
மு. பஷீர்

Wednesday 17 December 2014

'பாலைப் பூக்கள்' கவிதை நூல் - இரண்டு வருடங்கள்

'பாலைப் பூக்கள்' கவிதை நூல் - இரண்டு வருடங்கள்

'பாலைப் பூக்கள்' கவிதை நூல் வெளியிட்டு  இரண்டு வருடங்கள் ஆகின்றன. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இதன் வெளியீட்டு விழா நாகர்கோவிலில் சிறப்பாக நடந்தேறிய  நிகழ்வு இன்றும் நினைவுகளாய் பதிந்து ஈரமாய் இனிக்கிறது.
கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமையில், முனைவர்.வெ.இறையன்பு அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு ஆற்றிய மதிப்புரை இன்றும் மணம் வீசுகிறது. முனைவர்.சுந்தர ஆவுடையப்பன், முனைவர்.அப்துசமது, கேப்டன் அமீரலி, பதிப்பாளர் ஷாஜஹான், ஹாமீம் முஸ்தபா, ஆர்னிகா நாசர், கவிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் என அவை நிறைய தமிழ் நிறைந்து மலர்ந்திருந்த காட்சிகள் மனதுக்குள் இன்றளவும் மிளிரும் மத்தாப்பு ! 


அடுத்த ஆண்டில் அடுத்த படைப்பை வெளிக்கொணர வேண்டும் எனும் அவாவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இறைவன் நாடட்டும் !
அன்பன். மஸ்கட் மு. பஷீர்
http://www.youtube.com/watch?v=mFV0tSjlCZU

Saturday 2 August 2014

‘பாலைப் பூக்கள்’ நூல் பின்னூட்ட நிகழ்வு’ – அஜ்மான் அமீரகத்தில்...!

‘பாலைப் பூக்கள்’ நூல் பின்னூட்ட நிகழ்வு’ – அஜ்மான் அமீரகத்தில்...!

ஜூலை 31-ஆம் தேதி இரவு ‘அஜ்மான் சிவஸ்டார் அரங்கில்’ வைத்து  ‘பாலைப் பூக்கள்’ நூல் பின்னூட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு.ஹசன் அஹமது அவர்கள் தலைமையில், செல்வி ஆனிஷா மற்றும் செல்வன்.பசிம் பஷீர் ஆகியோரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

கவிஞர்.காவிரிமைந்தன், கவிஞர். திண்டுக்கல் ஜமால், கவிதாயினி நர்கீஸ்பானு ஆகியோர் ‘பாலைப் பூக்கள்’ நூலுக்கு பின்னூட்டம் வழங்கிப் பேசினர். நான் நிறைவாக  நூல்  ஏற்புரை வழங்கினேன்.

‘தமிழ்த்தேர்’ பதிப்பாசிரியர்.கவிஞர். ஜியாவுதீன் வரவேற்புரை வழங்க, ஊடகவியலாளர்  முதுவை. ஹிதாயத்துல்லா முன்னிலை வகித்தார். செல்வன்.பசிம் பஷீருக்கு நன்றியுரை வழங்க வாய்ப்பளித்து சிறப்பித்தனர்.

மனதுக்கும்  நெஞ்சுக்கு நிறைவான இலக்கிய சுற்றுலாவாக இந்தப்பயணம் அமைந்தது. தமிழ் உறவுதான் உறவுகளில் எல்லாம் சிறந்தது என்பதற்கு இந்தப்பயணம் ஒரு சான்று என்றால் அதுமிகையாகாது.

அன்பின் நினைவுகளுடன்,
மஸ்கட் மு.பஷீர் மற்றும்
குடும்பத்தினர்கள்.        




Sunday 15 June 2014

விடுதலை இதழில் 'பாலைப் பூக்கள்' கவிதை நூல் -ஆசிரியர் அய்யா. திரு. கி. வீரமணி அவர்களின் கருத்துப் பின்னூட்டம்

விடுதலை இதழில் 'பாலைப் பூக்கள்' கவிதை நூல் பற்றி ஆசிரியர் அய்யா. திரு. கி. வீரமணி அவர்களின் கருத்துப் பின்னூட்டம்.

http://www.viduthalai.in/e-paper/82139.html 

ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்குச் சென்று ஒரு நாள் - இடைவெளியில் - தங்கி, சென்னை திரும்பினோம் ஜெர்மனி நாட்டுப் பயணத்தில் (8.6.2014) ஓமான் கடலை நினைத்தால் இன்னமும் மறக்கவே முடியாத வேதனை எம் நெஞ்சத்தில்!

ஆனால் சிறிய அழகான, இயற்கை எழில் கொஞ்சும் நாடு, நெய்தல் (கடலும் கடல் சார்ந்த பகுதி), குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதி), பாலையும் மூன்றும் இணைந்த இயற்கைத்தாயின் முக்கூட்டு நாடு அது!

அதன் இயற்கை அழகைக் கண்டு வியந்தோம் அங்கு நமது குடும்ப நண்பர் அதிகாரியாக பணி புரியும் தி.வெங்கடேஷ் - அவரது வாழ்விணையர் சாமுண்டேசுவரி அவர்களும் எங்களை வரவேற்று தங்கள் இல்லத்தில் தங்க வைத்தனர். அன்பு உபசரிப்பால் திணற வைத்த அவர்கள், அங்குள்ள தமிழ் உறவுகளில் முக்கிய பொறுப்பாளராகவும், பல்வேறு துறை ஆற்றலாளராகவும், உள்ளவர் களையும் அவர்களது இல்லத்திற்கு அழைத்து ஒரு சிறு கலந்துரையாடல் நடத்தினார்கள்.

பல நூற்றுக்கணக்கான இளம் தமிழ்ப் பிள்ளைகளும் தமிழ்ச் சொல்லித்தரும் பள்ளிப்பணி முதல் தமிழ்ச் சங்கம் வரை மிக அருமையாக அந்தந்த தமிழர்கள் தொண்டறம் புரிகிறார்கள்.

நம் தமிழர்கள் பலரும் பல்வேறு தொழிலதிபர் களாகவும், அதி காரிகளாகவும், பொறியாளர்களாக வும், மேலாண்மை பொறுப்பாளர் களும் உள்ளனர் என்பது நமது காதில் தேன் பாய்ச்சுவதாக உள்ளது!

அங்கு தமிழ்ச்சங்கத்தை மிகவும் திறம்பட நடத்திவரும் ஜானகி ராமன் தமிழ் இலக்கிய கழகத்தை அமைத்து தவறாமல் சந்தித்து நடத்தி வரும் (குமரி மாவட்டம்) பஷீர் அவர்கள் தலைசிறந்த கவிஞர் இலக்கியப் படைப்பாளியாக உள்ளார் என்பது அவர் தந்த பாலைப்பூக்கள் கவிதைத் தொகுப்பின் மூலம் உலகிற்கே பறை சாற்றுகிறது!

தமிழ்நாட்டு வாழ் தமிழர்கள் என்பது தமிழ்த் தொண்டை விட மிகச்சிறப்பானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ் மண்ணை மறக்காதது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து செல்லும் தமிழர்களை கட்சி, ஜாதி, மத பேதமின்றி வரவேற்று வாழ்த்திடவும் தவறாததே. இலக்கிய தமிழ்ப்பண்ணையையும் அங்கே உருவாக்கி, ஒற்றுமை உழைப்பு என்கிற உரமிட்டு உழவாரப் பணிகளையும் செய்திட முன்னணியில் உள்ளனர்.

பாலைவனத்தில் கூட தமிழ்ப்பூக்கள் - பாக்கள் - பூத்துக்குலுங்கும் - புதுமணம் பரப்பும் - புகழ்முடி சேர்க்கும் என்பதற்கு 'பாகவி' பஷீர் அவர்களின் பாலைப்பூக்களே சான்று பகருவதாக உள்ளன. படித்தேன், சுவைத்தேன், கீழே வைக்காமல் படித்து முடித்தேன், எல்லாம் தெவிட்டாத தேன் தான்.

இதோ ஒரு சில பூக்கள் அந்த பூங்கொத்தி லிருந்து - சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கின்றன.

கருப்பு நிறம் கொண்ட காகத்தைப்பற்றிய கவிதை வரிகள் சில

காகம் கரைகிறது; கேட்போமா? (பக்கம் 18-19) (ஒரு பகுதி)

...என் மேனியின்
வண்ணத்தால் ஒதுக்கப்படுகிறேன்
தப்பேதான்!
இங்கே!
வர்ணங்களால் பிரிப்பது
வாடிக்கைதானே!
அடுத்து வரம் தருவாய் என்ற தலைப்பில் (பக்கம் 38)

தேய்கின்ற நிலவுக்கு சேதாரம் அகற்று - தருவாய்
பௌர்ணமியில் புல்வெளியில்
பாயிரம் பாடக் காற்று!


வீதியினில் திரிகின்ற

மதயானைகள் மதிபெறட்டும்-அது
வெறி கொண்டால் இரும்புத்
தளை கொண்டு அடங்கட்டும்!


சாதியின் பிரிவினையை

சம்மட்டியால் உடை - அருள்
சோதியின் வடிவே மனிதன் என்போரை
உபசரிக்கட்டும் வாசல் நடை!

இதுபோன்ற கருத்தாழம் மிக்க கவிதை வரிகளில் நல்ல மனித நேயம் மலர்ந்த பாலைப்பூக்கள் என்ற கரு பசுஞ்சோலைப்பாக்கள்! படித்துப் பயன் பெறுங்கள்.

Read more: http://www.viduthalai.in/e-paper/82139.html#ixzz34d99r1en


Thursday 24 October 2013

‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் பின்னூட்ட அமர்வு -மஸ்கட்

‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் பின்னூட்ட அமர்வின்
அன்பு நெஞ்சங்களுக்கு அகம் நெகிழ்ந்த நன்றி !    -- மு.பஷீர் 

எனது ‘பாலைப் பூக்கள்’ கவிதை பின்னூட்ட அமர்வு சென்ற 18-ஆம் ததி சிறப்புற நடந்தேறியது. நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த மஸ்கட் கவிஞர், படைப்பாளிகள், தமிழ் ஆன்றோர் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும்
அவர்தம்  மேலான பண்புக்கும்...
பனித்த நெஞ்சத்துடன்
பணிவான நன்றிகள் பலப் பல !


ஆய்ந்தறிந்த தமிழால்
அழகுத் தமிழ் நடையால்
அறிவுசார் பெருந்தகையீர்- நீவிர்
செறிவுசார் கருத்துப் பின்னூட்டம்
செவிக்கும் மனதுக்கும்
சேர்ந்தளித்த பாங்கினை
செவ்வனே ஏற்று - நான்
சீர்மிகும் கவிதைப் பயணம் தொடர
நீர்மிகும் ஆனந்தக் கண்களுடன்
நிறைந்த மனம் நிறைந்து
நன்றி  நவில்கிறேன் !

திரு. ராஜா சத்தியா நாராயணா தலைமையேற்க,
திரு.வெங்கட்ரமணி, திரு(க்குறள்) தங்கமணி,
திருமதி. சாவித்ரி ரகு, திருமதி. ஸ்வர்ணா சபரி,
திருமதி. தருமாம்பாள் சீனிவாசன்,
திரு.ரகுராம், திரு. கிருஷ்ணன், திரு. ஷண்முகசுந்தரம்,
திரு. சபரிக் குமார், திரு. காமில்கனி, திரு. செந்தில்குமார், திரு. பழனிக்குமார்,
திருமதி.விஜிமகாலிங்கம் எனப் பலரும் திறனாய்வு செய்தளித்த பின்னூட்டமும்,
இன்னும் திருமிகு அன்பர்கள் காவிரிமைந்தன், கவியன்பன் கலாம், கவிமதி, சக்திதாசன் பின்னூட்ட வடிவத்தினை வாசித்தளித்த
திரு. மஹாலிங்கம் மற்றும் திருமதி. சாந்திசண்முகம் 
எனக் கருத்துப் பின்னூட்டம் தந்த அனவருக்கும்,
மற்றும் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி !

இலக்கியப் பயணம் இனிதே தொடர
முழுமதி நாளில் தமிழ்புகழ்ப் பாடி
முத்தாய் விதைவிதைத்த மனங்களுக்கு நன்றி …!
தொடர்வோம் நமது தமிழ்ப் பணி !!

அன்புடன்,

மு.பஷீர் 
மஸ்கட். மு.பஷீர் – நூல் ஆசிரியர்.








நிகழ்வின் புகைப்படங்கள் சில…நன்றி: திரு.ஷண்முகம்

Wednesday 16 October 2013

‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா'


நாகர்கோவில் டிச,16
மஸ்கட்டில் வாழ்ந்து வரும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதியபாலைப் பூக்கள்என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா  நாகர்கோவிலில் சென்ற 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை முனைவர். வெ. இறையன்பு IAS அவர்கள் பெற்றுக் கொண்டார்.

ஆழமான சமுதாயக் கருத்துக்ககளையும், இலக்கியச் செறிவையும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் எனப் பாராட்டினார். கவிதைப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுணக்கம் பஷீரின் இந்தப் புத்தகம் மூலம் நீங்க, இது ஒரு தொடக்கமாக அமையட்டும் எனப் பாராட்டினார்.
  
கவிஞர் மஸ்கட்.பஷீர் மரங்கள், காகம், காற்று, மகாத்மா காந்தி பற்றியும் மற்றும் காதல், சமுதாயத்தின் பல்வேறு தாக்கங்களையும் பற்றியும் எழுதிய கவிதைகள் மிகுந்த கருத்தாழம் மிக்கவை எனப் பாராட்டினார். இன்னும் தொடர்ந்து பஷீர் அவர்கள் சிறுகதை, புதினம் போன்றவை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பாலைப் பூக்கள் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் சிறந்த கவிதைத் தரம் மிக்கக் கவிதைகள் எனப் பாராட்டினார். ஒருசில கவிதைவரிகளை மேற்கோள் காட்டி அதன் கவிதைச் செறிவினை எடுத்து விளக்கினார். ‘காகம்பற்றிய கவிதையின் சில வரிகள் இந்தக் கவிதைத் தரத்தினை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன எனப் பாராட்டினார்.
இந்தக் குமரிமண் தமிழின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமான மண் மட்டுமல்ல அது மிகச்சிறந்த புலவர்களையும், கவிஞர்களையும் உருவாகிய மண் எனக் குறிப்பிட்டார்.
கவிஞர் பஷீர் அவர்களைப் பாராட்டிப் பேசிய கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள், தொடர்ந்து இன்னும் சிறந்த நூல்களை அவர் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

விழாவுக்கு தலைமையேற்ற கோடை எப்.எம் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், பாலைப் பூக்களின் தரமானக் கவிதைகள் மக்களால் பேசப்படும் கவிதைகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டார். ‘கணவன்கவிதை ஆண்கள் மனதில் ஏற்ற வேண்டிய கவிதை எனக் குறிப்பிட்டார்.  
தமிழகத்தில் மின்தடை பற்றிய குறுங்கவிதையும், பூக்களின் ஊர்வலம் கவிதை உட்படப் பல கவிதைகள் தரமானதும் இலக்கிய வளம் மிக்கதுமாகும் எனக் கூறினார்.  

நன்றியுரை மற்றும் ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர், தன்னுடைய கவிதை பிறப்பின் ஊன்றுகோலாக இருந்த காரணிகள், சூழல் பற்றியும், மஸ்கட்டில் இருந்தாலும் தன்னோடு இரண்டறக் கலந்துவிட்ட நாஞ்சில் மண்ணில் சிறப்புதான் கவிதை படைக்க தனக்கு வடிகாலக அமைகிறது அன்பதையும் எடுத்துக் கூறினார்.

வரவேற்புரையாற்றிய பேரா.அப்துல்சமது அவர்கள்  நூலாசிரியரின் சிறப்பையும், நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறினார். குமரிமாவட்டம் தந்த சிறந்த கவிஞர்கள் வரிசையில் மஸ்கட்.பஷீரும் இணந்துகொண்டார் எனப் பாராட்டினார்.
தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கேப்டன்.அமீர்அலி, மு.பஷீர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.

விழாவில்  நேஷனல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான்முஸ்லீம் கலைக் கல்லூரி முதல்வர் முகமது அலி, எழுத்தாளர் ஆர்னிகா நாசர், கவிஞர் ராஜாமுகமது, கொடிக்கால் ஷேக் அப்துல்லா, முன்னாள் முதல்வர். ஹசன், டாக்டர். பத்மனாபன், ஆக்ஸ்ஃபோர்ட்.அலிகான், திரு.சிவராசன்திரு.செந்தீ நடராசன், மங்காவிளை ராஜேந்திரன், மஸகட் அபுல்ஹசன், அப்துல் சலாம், மற்றும் குமரிமாவட்ட பிரபல கவிஞர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், குமரி மாவட்ட மற்றும் சென்னைப் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

http://dinamani.com/edition_thirunelveli/kanyakumari/article1382746.ece