“ தமிழைப் பாடுவேன் ! தமிழைப் பாடுபவர்களைப் பாடுவேன் !”
திரு. சக்தி சக்திதாசன்
லண்டனிலிருந்து….
“பாலைப் பூக்கள்” பின்னூட்டம்
எனது அருமையான நண்பர் கவியரசரின் புகழ்பாடும் இனிய
உள்ளம் கொண்ட
கவிஞர்
காவிரி
மைந்தன்
ஊடாக இந்நூலின் கணினிப் பிரதியைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இதற்கு ஒரு மதிப்புரை தரவேண்டி நண்பர் காவிரி நண்பர் அனுப்பிய மின்னஞ்சலைப் பார்த்ததும், உள்ளத்தில் ஒருவகை பரவசத்துடன் கூடிய பீதி குடிகொண்டது. இத்தகைய அருமையான ஒரு கவிதத் தொகுப்புக்கு பின்னூட்டம் வழங்கத் தகுதி படைத்தவன் தானா என்பதுவே எமது பீதிக்குக் காரணம்.
“தமிழன்னை” அவள் ஆற்றலே தனி. எமது உள்ளக் கோவிலில் வீற்றிருக்கும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில்,
‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே..” என்று ஒரு பாடலில் வரும். ஆனால் தமிழன்னைக்கோ
“யாரை யாருடன் சேர்ப்பது” என்பதில் துளிகூட ஐயமில்லை. தமிழன்னையின் அறிமுகத்தால் பெற்ற அருமை நண்பர் காவிரிமைந்தனும், இன்று அவரூடாகப் பெற்றுக்கொண்ட நண்பர் எழுத்தாளர், கவிஞர் பஷீர் அவர்களின் அறிமுகமும் அளப்பரிய பொக்கிஷங்கள்.
பிறந்த மண்ணை விட்டு பிறிதோர் நாட்டில் வாழும் என்களைப் போன்றவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசும் பலரின் மத்தியில் வாழுகிறோம்.
இத்தகைய சூழலில் அன்னை மொழியில் தீராத பற்றுக் கொண்டவர்களுக்கு அம்மொழியின் பிரிவால் ஏற்படும் தாக்கம் பல்வேறு வகைகளில் வெளிப்படுகிறது, அத்தாக்கங்களைக் கவிதை எனும் நதிவழியாக தமிழ் எனும் நீர்கொண்டு பாய்ச்சும் திறமை சிலருக்கே வாய்க்கின்றது.
அப்படி வாய்ப்பவர்கள் கூட கவியாக்கங்களுக்காக தமக்கு அவ்வன்னிய நாட்டில் கிடைக்கும் ஓய்வுநேரங்களை அன்னைத் தமிழின் வனப்பினை வெளிப்படுத்தும் கவியாக்கத்தில் செலவழிக்க வேண்டி வருகிறது.
அவ்வயர்ச்சியையும் பொருட்படுத்தாது இத்தகைய கவிதைத் தொகுப்புக்களின் ஆக்கத்திற்கு செயல்வடிவம் கொடுப்போர் போற்றத்தக்கவர்கள்.
நண்பர் பஷீர் அவர்களை நான் சந்தித்தது கிடையாது. அவரது கவிதைகளைக் கூட இப்போதுதான் முதன்முறையாகப் படிக்கிறேன். ஆனால் என்னுள்ளே இந்நண்பரைப் பலகாலமாக அறிந்தது போன்ற ஒரு உணர்வு இவரது கவிதைகளின் சாரத்தைக் காணும்போது ஏற்படுகிறது.
கவிதை என்பது சாதாரண தமிழ் வரிகளைக் கோர்த்து எழுதிவிட்டால் மட்டும் வந்துவிடாது. ஒரு கவிஞனின் கவிதை வெற்றியடைவதன் காரணம் அது அவனின் உணர்ச்சியின் கோர்ப்பின் வெளிப்பாடே!
இப்”பாலைப் பூக்கள்” எனும் கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படித்து அவைகளில் மனம் கவர்ந்தவைகளுக்கு மட்டும் குறிப்பெழுத எண்ணியபோது, அனைத்துக் கவிதைகளும் மனதைக் கவர்ந்ததினால் அவை அனைத்தையும் இங்கு குறிப்பிடுவதற்கு நேரமும், இடமும் போதாது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார்போல நூலின் இறுதிக் கவிதையான @ நன்றி @ எனும் கவிதையைக் குறிப்பிட்டாலே இவரது திறமையின் ஆழத்தைக் கண்டுகொள்ளலாம்!.
ஒவ்வொருவருடைய வாழ்விலும் உணவே பிரதான இடத்தை எடுக்கிறது. அதைத் தடையின்றிப் பெறுவதற்கும் அதை எம்மைச் சார்ந்தவர்களுக்குத் தடையின்றி வழங்குவதற்குமாகவுவே பலர் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
அவ்வுணவின் ஆக்கத்திற்கு பெரும் துணைபுரியும்
உழவர்களின் ஏற்றத்தைக் கொண்டாடும் பொங்கலில், எம் அனைவர்க்கும் மேலான அந்த உழைக்கும்
மக்களுக்குச் செலுத்தும் நன்றியின் மூலம் இவர்தன் இனிமையான மனமும் புரிந்துணர்தலும்
வானளவு உயர்ந்து நிற்கிறது.
இதே போல நண்பர் பஷீர் இன்னும் பல அருமையான
படைப்புக்களை தமிழுலகிற்கு கொடுப்பார் என வாழ்த்துகிறேன் !
இவ்வரிய கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை
வழங்கச் சந்தர்ப்பம் தந்த என் இனிய நண்பர் காவிரிமைந்தனுக்கும், அன்பு எழுத்தாளர்,
கவிஞர் பஷீர் அவர்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“வாசகர்களின்றி எழுத்தாளார்கள் இல்லை”. இந்த
நூலைப் படித்து ரசித்து ஆதரவு நல்கப்போகும் நல்ல பல உள்ளங்களுக்கும் எனது அன்பான நன்றிகள்!.
“ தமிழைப் பாடுவேன் ! தமிழைப் பாடுபவர்களைப்
பாடுவேன் !”
அன்புடன்,
திரு. சக்தி சக்திதாசன்
லண்டன்.….