மஸ்கட் மலரின் மணம்
முனைவர். வெ. இறையன்பு இ.ஆ.ப
அயல் மண்ணில் பணிபுரியும் தமிழர்களுக்குத்தான் தாய்மொழியின் மீது அதிக பற்றும், ஆர்வமும்
இருக்கிறது என்பது மறுக்க முடியாத
உண்மை. அவர்களுக்கு மற்றவர்கள் வைவது
கூட தமிழில் இருந்தால் வாழ்த்துவது
போலத் தோன்றும். அவர்களில் ஒருவராய்
தமிழை நேசிக்கும் மஸ்கட்
பஷீர், திருவள்ளுவர் மீதும், தமிழ் மீதும், குமரி
மீதும் தீராத பற்றுள்ளவர்.
அவருடைய கவிதைத் தொகுதியை என்னிடம்
கொடுத்து நான் படித்துப் பார்க்க
வேண்டும் என்று விரும்பினார். அந்தத் தொகுப்பு
முழுவதும் துள்ளிக் குதிக்கும் சுவையும், சுவாரசியமும்...
அவள் கண்ணில் விழுந்த
துரும்பை எடுத்தேன் ;
நான் விழுந்தேன்!
என்ற முதல் கவிதையே அற்புதம்.
கணினியைப் பற்றிய கவிதையில்;
பெண்ணுக்கு வயதாகும்
நாளாக ..நாளாக!
இந்தக் குமரிக்கு மட்டும்
மேனி இளசாகும் நாள் போகப்போக!
மெத்தென உடல்
கொண்டாள்
எண்பதுகளில் ...
‘சிக்’கென
இடைகண்டாள்
இந்நாளில் !
என அவர் ஒப்பிடும் விதம் நம்மைக்
கவர்கிறது.
காகம் பற்றி எனக்கும் மென்
மூலையுண்டு.
நான் கொய்துகொண்டு வரும்
பழத்தைக் கூட
தவறிவிழுந்தால்
பொறுக்கி எடுப்பவன் நீ !
என மனிதர்களைப் பற்றி காகம் கூறும் குற்றச்சாட்டில் நாம்
குறுகிப் போகிறோம் !
குயிலின் முட்டைகளை
எங்கள் கூடுகள்
அடைகாக்கும்!
இன பேதமற்ற
இயற்கை தத்துவம்!
என்று முடியும் இக்கவிதை படிப்பினை.
‘அஞ்சல் செய்யாத கடிதம்’ தேசப்பிதாவின் மீது மஸ்கட் பஷீர் வைத்திருக்கும் அன்பின் அடையாளமாக மலர்ந்திருக்கிறது. ஆழமான கவிதை.
மரங்களைப் பற்றி எழுதுகையில்
வீட்டுக்கு ஒரு
மரம் வை !
முடியாவிட்டால்
வெட்டும் கோடரியை
சிறை வை !
‘கண்ணதாசன்’ இன்றும் அயல் நாடுகளில் தமிழரின் பால்ய கால நினைவுகளைக் கிளறிவிடுகிற கவிஞன்.
கம்பன் வரி
நேசித்தாய் !
கண்ணன் வரி
வாசித்தாய் !
தமிழ்க் காவியமாய்
பிறந்து நீ
சாதித்தாய் !
கவிதைத் தொகுப்பு முழுதுமே கற்கண்டுகளைப் பரப்பி வைத்து நம்மைப் பயணம் செய்யத் தூண்டியிருக்கிறார். அவருடைய தமிழ் மணமும், இலக்கிய ஆர்வமும், இம்மண் மீது அவர் கொண்டுள்ள பாசமும் நம்மை வியக்க வைக்கின்றன. இன்று நம்முடைய கொள்கைகளும் வாழ்க்கை நெறிகளும், வரைமுறையின்றி செல்வதை எண்ணி விசனப் படுகிறார் அவர்.
சமூக அக்கறையும், சகோதரத்துவமும் கொண்ட அவருடைய மனித நேயப் பார்வையும், மானுடம் செயற்கையாகத் திணித்துக் கொண்ட கோடுகளைத் தாண்டிய அவருடைய சிந்தனையும் நம்மைப் பரவசப் படுத்துகின்றன. நாம் இன்றும் விசாலமான இதயத்துடன் வாழவேண்டும் என்பதை இந்தக் கவிதையும், உணர்வுகளும் தெரியப் படுத்துகின்றன.
பஷீர் எழுச்சிமிக்க சிந்தனையின் தொடர்ச்சியாக நமக்குத் தெரிகிறார்.
அவர் புதினம், சிறுகதை போன்ற இலக்கியத் தடங்களிலும் அகலமாகக் கால்பரப்பிப் பயணிக்க வேண்டும்.
அவருக்கு நம் வாழ்த்தும், அன்பும்.
சென்னை
13-7-2012
No comments:
Post a Comment