பாலைப் பூக்கள் பின்னூட்டம்
திரு, சண்முகசுந்தரம்
பாலையில் பூக்கள் அரிதென்பது பரவலான நம்பிக்கை!
விதிவிலக்காக வளைகுடா பாலை நாடுகளில் மட்டும் இரவல் பூக்கள்
சாலைகளுக்கு வேலியாக...
பாலையிலும் பூக்கள் உண்டு. கோடை தொடங்கும் போதெல்லாம் பாளை வெடித்து
பூக்கள் கிளம்பும் ஈச்ச மரங்களில்...
அடுத்த முறை, கடந்து போகும் ஈச்ச மரங்களை ஒரு நொடி உற்று பாருங்கள்.
பாலை நிலத்தில் இறைவனின் கருணை ஈச்ச மர பூக்களாக!
இந்த கோடைக்கு, மஸ்கட் பாலை
நிலத்துக்கு வலசை வந்த ஒரு குமரி மண்ணின் மரம், பாலைப் பூக்கள் என்று
தன்னடக்கத்துடன் ஒரு நந்தவனத்தையே பரிசாகக் கொடுத்திருக்கிறது.
புத்தகத்தை பிரித்தால் கவிக்கோவும், இறையன்புவும் கை பிடித்து அழைத்து
செல்கிறார்கள். எழுத்துக்கள் தேய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் கை அளவு
வார்த்தைகளில் கடல் அளவு அர்த்தங்கள் கொடுக்கும் கவிக்கோவின் முன்னுரை. மனம் தொட்ட
வரிகளை பகிரும் இறையன்பு.
இருந்த போதிலும் பசீர் அண்ணாவின் மேலுள்ள உரிமையில் எங்கள்
பின்னூட்ட்டத்தையும் பதிவு செய்வதில் MOS மஸ்கட் அமைப்பு பெருமை அடைகிறது.
கவிஞர்.பஷீர் ஒரு குறுகிய வட்டத்தில் சிறை நில்லாமல், பரந்த தளத்தில் தன்
எண்ணங்களை பார்வைக்கு கொடுக்கிறார்.
அறிமுக கவிதை ஒரு உறைந்த தருணத்தின்
இளமை உயிர்ப்பு பதிவு.
அவள் கண்ணில் விழுந்த துரும்பை எடுத்தேன்.
நான் விழுந்தேன்.
ஏற்றம் மற்றும் அரசு அறிவிப்பு எள்ளல் தொனியில் சாமான்யனின் கையறு
நிலையை காட்டுகிறது.
தமிழகத்தில் மின்சரத்தால் மரணம் இல்லை.
தாரள மின்தடை.
இதயம் தொட்ட முத்திரை வரிகள் என்று இதைத் தான் சொல்வேன்.
வீட்டுக்கு ஒரு மரம் வை.
முடியா விட்டால் வெட்டும் கோடரியை சிறை வை.
தமிழகத்தின் அனைத்து மரங்களிலும் இந்த வரிகளை அச்சில் வைத்தால்
உறுதியாய், இன்னொரு மரம் மண்ணில் விழாது.
மயானம் என்ற கவிதை பின்னூட்டம் பலர் மனதை சுட்டதாக பசீர் ஒரு முறை
சொன்னார். மயானம் என்ற கரு இதற்கு முன்னால் என்னை இரு முறை சுட்டது. நந்தவனத்தில்
ஒரு ஆண்டி என்ற கதை மயான வெட்டியானின் மன வெளிப்பாடாக இன்னும் மனம் விட்டு
அகலவில்லை.
பின்னர் இயக்குனர் பாலாவின் பிதாமகன் என்ற படம் இன்னொரு மயான வாழ்வை
மனதில் தைத்தது. இப்போது பசீர் மயானம் மூலம் மீண்டும் மனம் சுடுகிறார்.
கற்பூரம் தீ குளிக்கும் போதும், ஊதுபத்திகள் தன்னையே எரிக்கும் போதும்
மயானத்தின் கதவுகள் மௌனமாக விரிகிறது.
இது சமத்துவ புரம். ஏழையுடன் எசமானனும் உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்
சமமாய் துயிலும் சரித்திரபுரம்.
உண்மையான பதிவு. மயானங்களில் நிறைய சரித்திரங்கள் முடிகின்றன. சில
சரித்திரங்கள் மயானங்களில் தான் தொடங்குகின்றன.
இதன் ஒரு முடிச்சு பயணம் என்ற கவிதையில் வெளிபடுகிறது,
இறப்பும் ஒரு பயணம் தான்.
ஒரு நட்சத்திரம் விழும் தருணம் போன்ற வரிகள் இது.
பாலை என்ற கவிதை
எல்லோரும் படிக்க வேண்டிய கவிதை.
அரபு மனம் தன்னையும்
, பனி செய்ய வந்த தமையனயும்
சோதரம் காட்டியதால்
செழிக்கிறது.
செல்வத்தின் பயன்
ஈதல் என்ற வரிகள்தான் அரபு நாட்டின் வளத்தின் மூலம் என்ற வரலாற்று பதிவை இதற்கு
மேல் நயமாய் எப்படி சொல்ல முடியும்.
அன்பு பசீர், இன்னும்
படையுங்கள்
படைப்புகள்
அனைத்தையும் பதியுங்கள்
பதிவுகளை தமிழ்
சமுதாய பார்வைக்கு கொடுங்கள்.
நிறைய தமிழ் மனங்கள்
இன்னும் பாலையாகவே உள்ளது. எல்லா மனங்களிலும் கவிதைகளை விதையுங்கள். பூக்கள்
பூக்கட்டும்.
MOS மஸ்கட் அமைப்பின்
அன்பும் வாழ்த்துக்களும் உங்கள் கவிதை பயணத்தில் என்றும் தொடரும்.
வாழ்க வளமுடன்
சண்முக சுந்தரம். க
21 – மார்ச் -2௦13
மாதம் ஒரு சங்கமம்
-முரசு கொட்டும் எட்டு விழாவில் அளித்த பின்னூட்டம்